Tuesday, October 16, 2012

வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்



வாங்க முன்னேறலாம் : பாராட்டு எனும் மந்திரம்

முன்னேற்ற படிக்கட்டில் ஏற முக்கியமான ஒரு குணம் பாராட்டும் மனம். வீடோ அலுவலகமோ நீங்கள் எப்போதும் தனியாக இயங்க முடியாது. இன்னும் சிலருடன் சேர்ந்து தான் இயங்க போகிறீர்கள். வீட்டை பொறுத்த வரை நீங்கள் தான் குடும்ப தலைவர்/ தலைவி. எனவே பிறரை ஊக்குவிக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. 

யோசித்து பாருங்கள்: உங்கள் கணவன்/ மனைவியை கடைசியாய் எப்போது எதற்காக பாராட்டினீர்கள் உடனே சொல்ல முடியுமா? இன்று பல வீடுகளில் மனைவி வேலைக்கு சென்றாலும் கூட பல வீட்டு வேலைகளை சுமக்கிறார். அவரை மனம் விட்டு பாராட்டுகிறோமா?

குழந்தைகளை கொஞ்சுகிறோமே ஒழிய, உண்மையான பாராட்டு வார்த்தைகள் அடிக்கடி சொல்கிறோமா? குழந்தைகளிடம் நாம் பேசும் ஒவ்வொரு பதினான்கு முறையில் ஒரு முறை தான் அவர்களிடம் பாராட்டாகவோ, பாசிடிவாகவோ பேசுகிறோம் என சமீபத்தில் வாசித்தேன். பிற நேரங்கள் அவர்களிடம் " இப்படி நட" " அப்படி செய்யாதே" போன்ற அதிகார வாக்கியங்கள் தான் பேசுகிறோம். 

உண்மையில் அத்தகைய வாக்கியங்கள் குறைவாகவும் பாராட்டும் வாக்கியங்கள் அதிகமாகவும் பேசுவதே அவர்களுக்கு நன்மை தரும்.



ஒருவரை பாராட்ட தன்னம்பிக்கை வேண்டும். தான் அப்படி இல்லையே, தன்னால் அப்படி செய்ய முடியலையே என மனதுள் குமைய கூடாது. நாம் பாராட்டும் போது அந்த தொனி வர கூடாது. அது கெடுதலே அதிகம் செய்யும்.

டேல் கார்நிஜி என்ற ஆங்கில எழுத்தாளர் மிக பிரசித்தம். அதிலும் அவரின் “ How to win Friends and influence people” பலரும் விரும்பி படித்த புத்தகங்களுள் ஒன்று. அதில் அவர் மனிதர்களுடன் நல்ல உறவு / நிறைய நண்பர்கள் வேண்டுபவர்கள் அவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள் என மறுபடி, மறுபடி சொல்கிறார். 

பசங்க - எனக்கு தமிழில் ரொம்ப பிடித்த படங்களுள் ஒன்று. அதில் வரும் ஒரு வசனம்: " ஒவ்வொரு மனுஷன் மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காக ஏங்கிட்டு இருக்கு" எவ்வளவு உண்மையான வரிகள்!! படத்தின் இறுதியில் கூட இறக்க இருக்கும் மாணவன் கைதட்டல் ஒலிகளால் நினைவு வந்து எழுவதாக காட்டியிருப்பார்கள். பார்க்கும் போதே நெகிழ்வில் அழ வைக்கும் காட்சி அது. இந்த படத்தின் அடி நாதமாக இருந்தது " பிறரை மனம் விட்டு பாராட்டுங்கள்" என்பதே. 

கவிஞர் வைரமுத்துவை ஒரு முறை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் நண்பர்கள் சிலர் சந்தித்தோம். அப்போது அங்கிருந்த வயதான ஒருவர் அவர் எழுத்துக்களை, சில வரிகளை குறிப்பிட்டு புகழ்ந்தார். வைரமுத்து மகிழ்ச்சியில் குழந்தை போல தோற்றமளித்தார். எத்தனை தேசிய விருதுகள் வாங்கிய மனிதர்! அவரையும் ஒருவர் உண்மையாக பாராட்டும் போது குழந்தை மாதிரி குதூகலம் அடைந்ததை நேரில் பார்த்தேன்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Even God is pleased when praised!!

எனது அனுபவத்தில் சிறு வயது முதல் இன்றுவரை பல சூழல்களில் யார் யார் என்னை எப்படி பாராட்டினார்கள் என்பதை பெரும்பாலும் நினைவில் வைத்துள்ளேன். அவற்றை அடிக்கடி நினைத்து பார்ப்பது என் மேல் எனக்கே நம்பிக்கை தரும். 

இன்னொரு பக்கம், எனக்கு ஒரு விஷயம் பிடித்து விட்டால் நிச்சயம் பாராட்டி விடுவேன். உறவினர் வீட்டில் குடித்த தேநீர் நன்றாக இருந்தால் அதை தயார் செய்தது யார் என கேட்டு நேராக அவரிடமே சென்று பாராட்டினால் தான் நிம்மதி எனக்கு. போலவே அரங்கில் ஒருவர் பாடுகிறார்/ பேசுகிறார், அது பிடித்தது எனில் விழா முடிந்து செல்வதற்குள் அவரை தேடி சென்று பாராட்டிவிடுவேன். 

ஆனால் இப்படி பாராட்டுபவர்களை வாழ்வில் மிக குறைவாக தான் பார்க்கிறேன். பலரும் மற்றவர்களிடம் பாராட்டுகிறார்களே அன்றி குறிப்பிட்ட அந்த நபரிடமே பாராட்டுவதில்லை. 

எனக்கு தெரிந்த ஒரு பெண்மணிக்கு மூன்று மருமகள்கள். ஒரு மருமகளிடம் பேசும் போது மற்ற மருமகளிடம் பார்த்த நல்ல குணங்கள், அவர் வீட்டில் இருந்த போது எப்படி உபசரித்தார் என புகழ்ந்து தள்ளுவார். ஆனால் குறிப்பிட்ட அவரிடம் இவற்றிற்காக பாராட்டியிருக்க மாட்டார். இதில் என்ன பலன்? கேட்டவர் " அப்ப உங்களுக்கு அவரை தான் பிடிக்கும் போல இருக்கு" என நினைத்து கொள்வது மட்டும் தான்!! இதற்கு பதில் அவரிடமே " உனக்கு என் மேல எவ்வளவு பிரியம்; என்னை நல்லா பார்த்துக்குறியே" என சொல்லியிருந்தால் அவரும் மகிழ்ந்திருப்பார். 

உண்மையில் தன்னை முழுதாய் அறிவது தான் கடினமான செயல். நீங்கள் பாராட்டும் நபருக்கே தன் பலம் தெரியாமல் இருக்கலாம். அந்நிலையில் அவரது பலத்தை அவருக்கே நீங்கள் உணர வைக்கிறீர்கள்!! எண்ணி பாருங்கள் எத்தனை உன்னதமான செயல் இது!!

நிறைவாக பாராட்டு - சில விதிகளை பார்ப்போமா? 

1. பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். செயற்கையாகவோ அடுத்து அவரிடமிருந்து வேறு உதவி எதிர் பார்த்தோ இருக்க கூடாது. உண்மையான பாராட்டிற்கும், பொய் புகழ்ச்சிக்கும் வித்தியாசம் யாராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். 

2. பாராட்டுவதில் தயக்கம் கூடாது. முதலாவதாக பாராட்டுபவராக இருங்கள். முதலில் வேறு யாரும் பாராட்டி விட்டாலும் நீங்களும் எப்படி உணர்ந்தீர்கள் என சொல்லி பாராட்டலாம்.  

3. பாராட்டும் போது முடிந்த வரை பொதுவாக இல்லாமல் குறிப்பிட்ட எந்த விஷயம் பிடித்தது என சொல்லி பாராட்டுவது நலம். 

4. எதற்காக பாராட்டலாம்? எதற்காகவும் பாராட்டலாம். உடைக்காக, தலை அலங்காரத்திற்காக, அவரிடம் உள்ள நல்ல பழக்கத்திற்காக ..இப்படி அந்த நேரத்தை பொறுத்து உங்கள் மனதில் அவரை பற்றி நல்ல எண்ணம் வரும் போது பாராட்டலாம். கவனம்: எதிர் பாலார் opposite sex - எனில் உடை மற்றும் அழகுக்காக பாராட்டுவது சில நேரம் ரசிக்க படாமல் போகலாம். 

5. யாரை பாராட்டலாம்? யாரையும் பாராட்டலாம். உங்களுக்கு தெரிந்தவர், தெரியாதவர், அலுவலகத்தில் உங்கள் கீழ் வேலை செய்பவர் மட்டுமல்ல உங்களுக்கு இணையான நபர், உங்கள் பாஸ் என யாரையும் சரியான காரணத்துக்காக பாராட்டலாம். (சிலர் பாஸை பாராட்டுவதை " காக்கா" பிடிப்பதற்காக செய்ய கூடும். அவ்வாறு இல்லாமல், முதல் பாயிண்டில் சொன்னது போல் பாராட்டு உண்மையாக இருக்க வேண்டும். காக்கா பிடிக்க செய்யும் முயற்சிகள் பாஸுக்கு எளிதில் தெரியும்)

6. எப்படி பாராட்டலாம்? பெரும்பாலும் நேரில் பாராட்டுவது மிக சிறந்தது. அது இயலாத போது மெயில் அல்லது போனில் பாராட்டலாம். மெயில் எனில் சிலர் அந்த பாராட்டுகளை டெலிட் செய்யாமல் நினைவாக வைத்திருக்க வாய்ப்புகள் உண்டு. 

வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஒருவர் மற்றவர் மேல் ஏதோ ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தி செல்கிறோம். அந்த தாக்கம் நல்ல விதமாக இருக்கட்டுமே.. உங்களை சுற்றி உள்ளவர்களை மனம் விட்டு பாராட்டுங்கள். அவர்களும் மகிழ்வார்கள். என்றும் அந்த வரிகளை மட்டுமல்ல, உங்களையும் சேர்த்தே நினைவில் கொள்வார்கள். 

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?

    எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
                                                          --------------------


அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A GOOD ONE FOR SUPERSTITIOUS PEOPLE" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது. அதற்கான இணைப்பு:

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்). 

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"
 
அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

பிறரை சிந்திக்கத் தூண்டும் நல்லதொரு செய்தியைப் பகிர்ந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி! நீங்களும் பிறருக்குப் பகிரலாமே!

Total Pageviews

Followers