Thursday, June 27, 2013

ஆன்மிக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

ஆன்மிக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!

படித்ததை உங்களுடன்

ஞான ஆலயம் ஜனவரி 2013 இதழில் வெளியான சிறப்புக்கட்டுரை
தமிழில்ச.நாகராஜன்

விஞ்ஞானி ஆண்ட்ரூ நியூபெர்க்

உலகின் பிரபல மூளை இயல் நிபுணரும் விஞ்ஞானியுமான ஆண்ட்ரூ நியூபெர்க் தனது அதிசய ஆராய்ச்சிகளின் மூலம் ஆன்மீகவாதிகளுக்கு ஒரு அற்புதமான செய்தியை அளித்துள்ளார். இறை நினைவு ஏற்படும்போதெல்லாம் மூளையில் அதிசயத்தக்க விதத்தில் மாறுதல்கள் ஏற்பட்டு பல நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தான் அது!

ஆண்ட்ரூ நியூபெர்க் பல பிரமிக்க வைக்கும் புத்தகங்களைப் படைத்தவர். 150க்கும் மேற்பட்ட அரிய ஆய்வுக் கட்டுரைகளை அறிஞர்கள் வியக்கும்படி சமர்ப்பித்தவர். பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ரேடியாலஜி பிரிவில் அசோசியேட் பேராசிரியராகப் பணியாற்றும் இவர் ஆன்மீகம் மற்றும் மன மையத்தின் இயக்குநராகவும் இருக்கிறார்.



ஆன்மீக அனுபவங்களால் பல்வேறு நிலைகளை அடையும் ஏராளமானோரை அவர் தனது ஆய்வுக்கு உட்படுத்தினார். இதற்காக அவர் கையாளும் தொழில்நுட்ப உத்தியின் பெயர் சிங்கிள் போடான் எமிஷன் கம்ப்யூடட் டோமோகிராபி ( Single Photon Emission Computed Tomography ). இந்த ஆய்வுக்கு உட்படுவோரின் உடல்களில் காமா கதிர்களை வெளிப்படுத்தும் ஒரு வித கெமிக்கல், ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த கதிர்கள் தரும் தகவல்களை ஒரு கணினி சேகரிக்கிறது. அதன் மூலம் அவர்களின் மூளையில் ரத்தம் பாயும் பகுதிகள் பற்றிய படம் சித்தரிக்கப்படுகிறது. எந்தப் பகுதியில் அதிகமாக ரத்தம் பாய்கிறதோ அங்கு மூளை அதிகமாகச் செயல்படுகிறது என்று அர்த்தம்.


பிரான்ஸிஸ்கன் நன் களையும் திபெத்திய யோகிகளையும் தனது ஆய்வுக்கு வருமாறு ஆண்ட்ரூ அழைத்தார். மகிழ்வுடன் அவர்களும் இசைந்தனர். சுமார் 15 ஆண்டுகாலம் பென்சில்வேனியாவில் இடையறாது தன் குழுவினருடன் ஆய்வை நடத்தி வந்த ஆண்ட்ரூ மூளையின் முக்கியமான ஆறு பகுதிகளில் இறை உணர்வால் பெரும் மாற்றங்கள் ஏற்படுவதைக் கண்டறிந்தார்.



அந்த ஆறு முக்கிய பகுதிகள் : 

1) முன் மடல் (frontal lobe) 



2) லிம்பிக் அமைப்பு (limbic system)

3)ஆன்டீரியர் சிங்குலேட் (anterior cingulate

4) அமிக்தலா (amygdale) 

5) தாலமஸ்(thalamus) 

6) சுவர் மடல்(parietal lobe)



தியானம் அல்லது ஆன்மீக உணர்வுகள் மேம்படும்போது மடல்கள் ஒரு வலிமை வாய்ந்த உணர்வை அனுபவிக்க வைக்கின்றன. ரத்த ஓட்டத்தினால் முன் மடல் மேலே செல்வதற்குப் பதிலாக கீழே செல்கிறது! இதன் மூலம் அவர்கள் கூறும் அல்லது அனுபவிக்கும் அற்புத அனுபவங்கள் உண்மையே என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது.

இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

ஆச்சரியமான விஷயம் என்னவெனில் இறைவனைப் பற்றி நினைக்க ஆரம்பிக்கும் போதே மூளையில் வெவ்வேறு சர்க்யூட்டுகள் உருவாகின்றன. ஹிந்து, புத்த, யூத, கிறிஸ்தவ, இஸ்லாம் மதத்தில் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் இது ஏற்படுகிறது.

அறிவியல் உணர்த்தும் ஐந்து பேருண்மைகள்

பிரான்ஸிஸ்கன் நன்கள் மற்றும் புத்த குருமார்களை நான்கு வருட காலம் சிறப்பாக ஆய்வுக்குட்படுத்திய பின் ஆண்ட்ரூ பின் வரும் உண்மைகளைக் கண்டறிந்தார்.

1) மூளையின் ஒவ்வொரு பகுதியும் கடவுள் பற்றிய வெவ்வேறு கருத்தை அமைத்துக் கொள்கிறது. அதிகம் தியானிக்கத் தியானிக்க கடவுள் இன்னும் அதிக மர்ம புருஷராகிறார்!
(ஒப்பீடு:-சொல் பதம் கடந்த தொல்லோன் போற்றி-மாணிக்கவாசகர் திருவண்டப்பகுதியில்)

2) கடவுள் பற்றிய அமைப்பை ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்வதோடு, கடவுளுக்கு வெவ்வேறு குணநலன்களையும், மதிப்பையும், அர்த்தத்தையும் கற்பித்துக் கொள்கிறான்.
(ஒப்பீடு:-அவரவர் தம தமது அறிவு அறி வகைவகை அவரவர் இறையவர் என அடி உடையவர்கள் அவரவர் இறையவர் குறைவிலர் - நம்மாழ்வார்)

3) மத நம்பிக்கையே இல்லாவிட்டாலும் கூட ஆன்மீகப் பயிற்சிகளை ஒருவர் மேற்கொள்ளும்போது உடல் நலமும் உள்ளநலமும் மேம்படுகிறது.
(ஒப்பீடு:-வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே – வள்ளலார்)

4) நீண்ட கால தியானப் பயிற்சி மூளையின் அமைப்பையே முற்றிலுமாக மாற்றி விடுகிறது!இது மூட் எனப்படும் மனநிலையை சீராக ஒரே மாதிரி இருக்கும்படி செய்கிறது.ஆன்ம அறிவை ஏற்படுத்தி புலன் உணர்வுகளை நன்கு உருவாக்குகிறது.
(ஒப்பீடு: அடிமுடியும் நடுவும் அற்ற பரவெளிமேல் கொண்டால் அத்வைத ஆனந்த சித்தம் உண்டாம்: நமது குடி முழுதும் பிழைக்கும்; ஒரு குறையும் இலை – தாயுமானவர்)

5) சாந்தி, சமூகம் பற்றிய விழிப்புணர்வு. தயை ஆகியவற்றிற்கு ஆதாரமான குறிப்பிட்ட மூளை சர்க்யூட்டை அதற்குரிய பகுதியில் வலிமைப்படுத்துகிறது. 
(தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே- மாணிக்கவாசகர் – சிவ புராணத்தில்)

கடவுளை இடைவிடாது நினைக்க நினைக்க அவர் உங்கள் மூளையை நிச்சயம் மாற்றிக்கொண்டே வருகிறார்.

இப்படி ஆழ்ந்த ஆன்மீக அனுபவத்தில் நம்பிக்கை கொண்டவர்களே அதிக நோபல் பரிசுகளை சமாதானத்திற்காகப் பெற்றதை ஆண்ட்ரூ சுட்டிக் காட்டுகிறார்.மார்ட்டின் லூதர் கிங்.,பிஷப் டெஸ்மாண்ட் டுடு. தலாய் லாமா, மதர் தெரஸா ஆகியோர் உலக அமைதிக்காகப் பாடுபட்டதற்கு அவர்கள் உலகின் பால் கொண்டுள்ள அதீத தயை உணர்ச்சியே ஆகும்!





நியூரோபிளாஸ்டிசிடி

நியூரான்கள் ஒரு கட்டத்தில் கற்பதை நிறுத்தி விடுகின்றன என்று மூளை இயல் நிபுணர்கள் இது வரை கருதி வந்தனர். ஆனால் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானியான எரிக் காண்டல்,” மூளை நியூரான்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை.உள்ளும் புறமும் ஏற்படும் ஒவ்வொரு மாறுதலுக்கும் ஏற்ப நரம்பு செல்கள் மாறுகின்றன.இது வயதானாலும் தொடர்கிறது” என்று கூறுகிறார். இப்படிப் பல கண்டுபிடிப்புகளை இன்று நமக்குத் தரும் புதிய துறையின் பெயர் நியூரோபிளாஸ்டிசி.






ஆன்மீகவாதிகளுக்கு மூன்று ‘C’க்களில் அதிக திறன் ஏற்படுகிறது. Cognition. Communication creativity ஆகிய அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன், படைப்பாற்றல் திறன் மூன்றும் அபரிமிதமாக செழிக்கிறது.இறுதியாக ஆன்மாவை அறியச் செய்கிறது!

ஒழுங்கான முறையான விரதம், தியானம், பிரார்த்தனை, வழிபாடு, இதர மதச் சடங்குகள் ஆகியவற்றை மேற்கொள்ளும் போது இரண்டு விதமான மாற்றங்களை ஏற்படுத்துவதை மூளை காண்பிக்கிறது.

ஆன்மீகப் பயிற்சி தரும் அளப்பரிய நன்மைகள்

ஆகவே 
1)உலகில் நிலை பெற்றிருக்கும் கடவுள். 
2)அவரைப் பற்றிய ஆழ்மன நிலையில் நமது அறிவும் அனுபவமும், 
3)வெளிப்படையாக அவரைப் பற்றிய நமது கருத்தினால் முன்மடல், பக்கமடல்,சுவர் மடல் ஆகிய மூளைப் பகுதிகளில் நாம் அமைத்துக் கொள்ளும் அமைப்பு 
ஆகிய மூன்று நிலைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இதற்கு பிரார்த்தனை உள்ளிட்ட அனைத்தும் நமக்கு உதவி செய்து வியக்கவைக்கும் சாந்தியை நமக்கு அளிக்கிறது.

தயை என்பது நமக்கு உயரிய ஆன்மீக அனுபவத்தைத் தருகிறது. இந்த தயை (பிற உயிர்களிடத்து இரக்கம்) உச்சநிலையை எட்டுவதற்கும் நமது ஆன்மீகப் பயிற்சியே அடித்தளமாக அமைகிறது.

மூளையை மாற்றும் இறைவன்
இவற்றையெல்லாம் தெள்ளத் தெளிவாக கடவுள் உங்கள் மூளையை எப்படி மாற்றுகிறார் (How God Changes Your Brain) என்ற பல லட்சம் பிரதிகள் விற்பனையான தனது புத்தகத்தில் மார்க் ராபர்ட் வால்ட்மேன் என்பவருடன் இணைந்து எழுதியுள்ளார் ஆண்ட்ரூ!


இதன் ஆழமான பொருள் அறிவியல் ஆராய்ச்சியால் அல்லவா இப்போது விளங்குகிறது.
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம்!!


2 comments:

  1. விளக்கம் அபாரம்... நன்றி...

    ReplyDelete
  2. இறை நினைவு அனைத்து மதத்தினருக்கும் ஏற்றம் தரும்

    ஏற்றம் மிக்க இனிய பகிர்வுகள். பாராட்டுக்கள்..

    ReplyDelete

Total Pageviews

Followers