“தண்ணீர் தனியார்மயம்” என்ற நிபந்தனையின் பெயரில் கடன்களையும் மானியங்களையும்
வழங்கும் உலகவங்கி(அமெரிக்காவின் அடிமை),ஏதேனும் ஒரு கட்டத்தில் அந்த குறிப்பிட்ட நாடு
சுதாரித்துக்கொண்டால்,தன் உண்மை முகத்தைக் காட்டுகிறது. ‘என்னையே எதிர்க்கிறாயா?அப்படினா,மொத்தக்
கடனையும் வட்டியும் முதலுமா திருப்பிக் கொடு’ என கழுத்தில் கத்தி வைக்கிறது.இல்லை எனில்,அந்த
நாட்டில் இருக்கும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்களின் ஒட்டு மொத்த முதலீடுகளும் உடனே
திரும்ப பெறப்படும் என மிரட்டுகிறது.முழுக்க முழுக்க தன்னையே சார்ந்திருக்கும் நிலைமையை
உருவாக்கியப் பிறகு இப்படி கொடூரவில்லனாகத் திரும்புகின்றனர்.
ஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்பப்
பெற்றுக்கொள்ளும் உரிமை, ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு.ஆனால்,தன் நாட்டு
மக்களின் நலனுக்காக,ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்துக்கு இல்லை;இதைத்
தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.நம் ஊரில்,நம் வரிப்பணத்தில் சலுகைகளைப் பெற்று தொழில்
நடத்தும் இந்த நிறுவனங்களை,நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தமுடியாது.அவர்களி ன் கட்டுப்பாட்டில்
தான் நம் அரசாங்கம் செயல்படுகிறது.வால்மார்ட் வாலாட்டினாலும்,என்ரான் என்ன செய்தாலும்
இவர்களால் எதுவும் செய்யமுடியாமல் போவதற்கான காரணம் இதுதான்.ஆனால்,ஈழத்தமிழர்களின்
நலனுக்காக இரண்டு வார்த்தை கூடுதலாகப் பேசினால் மட்டும் ‘இறையாண்மை’யை இழுத்துவந்து
ஒப்பாரி வைப்பார்கள்.
அதே நேரம் உலகவங்கியோ பன்னாட்டு நிறுவனங்களோ,வீழ்த்தமுடியாத விஸ்வரூபப்
படைப்புகள் அல்ல;உலகம் எங்கும் எத்தனையோ நாடுகலில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து
நடந்து கொண்டுதான் இருக்கின்றன.2000 ம் ஆண்டில் ஆந்திராவில்,தனியார்மய ஆதரவு நிகழ்ச்சி
ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார் அப்போதைய உலகவங்கியின் தலைவர்,ஜேம்ஸ் உலஃபென்சன்.பல்லாண்டுகளாக
நஷ்டத்தையே சந்தித்து வந்த ஆந்திரவிவசாயிகள்,உலக வங்கியின் தலைவரை எதிர்த்து போராட்டம்
நடத்தி துரத்தியடித்தனர்.
முதலீட்டு சர்ச்சைகளுக்கான சர்வதேச மத்தியஸ்த அமைப்பு(International
centre for settlement of investment disputes)என்பது உலக வங்கியின் ஓர் அங்கம்.தண்ணீர்
கம்பெனிகளுடனான ஒப்பந்தத்தை ஏதேனும் ஒரு நாடு ரத்து செய்தால்,அந்த நாட்டிடம் பஞ்சாயத்து
செய்து,நஷ்ட ஈடு வாங்கித்தரும் அமைப்பு இது.தண்ணீர் தனியார் மயத்தை ஏற்றுக்கொள்ளும்
நாடுகள்,இதிலும் ஓர் உறுப்பினராக வேண்டும்.இந்த நிலையில் தான்,லத்தீன் அமெரிக்க நாடுகளில்
இந்த தண்ணீர் கம்பெனிகள் நடத்திய பகாசுரக்கொள்ளைக்குப் பிறகு,பொலிவியா,நிகரகுவா,வெனிசூ லா
போன்ற நாடுகள் இந்த அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டன.ரோஷமுள்ள நாடு அப்படித்தான் செய்யும்.ஆனால்,
இந்தியா என்ன செய்கிறது?
தொடர்ந்து தன் வளங்களை எல்லாம் பெருமாள் கோவில் சுண்டல்போல,பன்னாட்டு
நிறுவனங்களுக்கு அள்ளித்தருகிறது.சொந்த மக்கள் சாகும்போது,பொறுப்பற்ற முறையில் தண்ணீரை
வீணடிக்கிறது.
மகாராஷ்டிரா மாநிலம் தனது வரலாற்றில் மிக மோசமான வறட்சியை இந்த ஆண்டு
சந்தித்திருக்கிறது.தண்ணீருக்கா ன போராட்டங்கள் தீவிரம் அடைந்திருந்த வேளையில், “அணையில்
தண்ணீர் இல்லாத போது எங்கிருந்து தண்ணீர் விட முடியும்? நாங்கள் சிறுநீர் கழிக்கவா
முடியும்? எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் கிடைக்கவில்லை.அதனால் சிறுநீர் கூட சீக்கிரத்தில்
வராது” என்று திமிரின் உச்சத்தில் பேசினார் மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவார்.
அவர் இப்படிப் பேசிய கடந்த ஏப்ரல் மாதத்தில் தான்,நாடுமுழுவதும் ஐ.பி.எல்.போட்டிகளின்
ஆறாவது சீஸன் நடந்துகொண்டிருந்தது.அதில் மஹாராஷ்டிராவின் இருபெரும் நகரங்களான மும்பை
மற்றும் புனேநகரங்களில் மொத்தம் 16 போட்டிகள் நடைபெற்றன.போட்டி நடைபெறும்போது கிரிக்கெட்
மைதானங்களின் பசுமையை பாதுகாக்க,அரசு சலுகைவிலையில் தண்ணீர் வழங்கியது.ஒரு டேங்கர்
லாரி தண்ணீர் ரூ.400வீதம் நாள் ஒன்றுக்கு25,000 முதல் 26,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்பட்டது.அந்த
சமயத்தில்,மாநிலம் முழுக்க விவசாயிகள் கருகும் தங்கள் விளைப்பயிரைப் பாதுகாக்க,ஒரு
டேங்கர் லாரி தண்ணீரை ரூ.1500 முதல் ரூ.3000
வரை விலை கொடுத்து வாங்கினர்.இந்த விவரங்கள் முன்கூட்டியே வெளியேவந்து எதிர்ப்புகள்
கிளம்பியபோதும்,கிரிக்கெட் மைதானத்துக்குத் தாராளத் தண்ணீர் விநியோகம் தடைபடவில்லை;
துணிக்கடை பொம்மைக்கு ஆபாசமாக துணி அணிவிப்பதைக் கண்டித்து போராடும்
அமைப்புகளுக்கு,மக்கள் தாகத்தில் சாகும்போது விளையாட்டுக்குத் தண்ணீர் விநியோகம் செய்யும்
இந்த கொடுஞ்செயல்,ஆபாசமாகத் தெரியவில்லை;பெயரளவுக்கு ஓர் அறிக்கையை கொடுத்துவிட்டு
ஒதுங்கிக்கொண்டனர்.கிரிக்கெட்டு க்கு மட்டுமல்ல;ஒவ்வொரு நாளும் இந்த நாட்டின் நட்சத்திரவிடுதிகளில்
வீணடிக்கப்படும் தண்ணீரைக்கொண்டு பல லட்சம் மக்களின் தாகத்தைத் தீர்க்க முடியும்.ஏழை
மக்கள் சமைக்கவும் குளிக்கவுமே தண்ணீர் இல்லாமல் குடங்களைத் தூக்கிக்கொண்டு அலையும்போது,ஸ்டார்
ஹோட்டல்களின் நீச்சல் குளத்தில் தண்ணீர் ததும்பி நிற்பதும்,அதில் ஆனந்தமாக நீந்தித்
திளைப்பதும் ஆபாசம் இல்லையா?
சென்னை நகரத்தில் அனைத்து சொகுசு விடுதிகளையும் மொத்தமாகக் கணக்கிட்டால்
4,656 அறைகள் உள்ளன.ஒரு நட்சத்திரவிடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல்
2000 லிட்டர் வரை தண்ணீர் செலவாவதாக நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.இந்த நட்சத்திர ஹோட்டல்கள்
ஒரு நாளைக்கு உறிஞ்சி ஏப்பம்விடும் தண்ணீரின் அளவு 50,00,000 லிட்டர்கள்.இதை நுகரும்
மக்களின் எண்ணிக்கையோ சில ஆயிரம் பேர்.இதைவிட எண்ணிக்கையில் குறைவான கோடீஸ்வரர்கள்
புழங்கும் இடம் கோல்ஃப் மைதானம்.சென்னையில் மட்டும் மூன்று கோல்ஃப் மைதானங்கள் உள்ளன.இவற்றைப்
பசுமையாகப் பராமரிக்க,ஒரு நாளைக்கு சராசரியாக 60,00,000 லிட்டர் தண்ணீர் செலவிடப்படுகிறது.எங்கிருந்து
வரும் இந்தத் தண்ணீர்? எல்லாம் மக்களுக்கு வர வேண்டிய தண்ணீர் தான்.நான்கு குடம் தண்ணீருக்காக
குழாயடியில் வரிசையில் கால் கடுக்கக் காத்திருக்கிறார்களே. . . அவர்களின் தண்ணீர்தான்.இதுபோக
சென்னையிலும் இதர நகரங்களிலும் இருக்கும் ஆயிரக்கணக்கான நீச்சல் குளங்களையும்,வாரம்
தோறும் அதில் மாற்றப்படும் தண்ணீரையும் கணக்கிட்டால்,ஒரு போகம் குறுவை சாகுபடிக்கு
உதவலாம்.
குடிக்கும் தண்ணீரில் மட்டும் இத்தகைய நிலை இல்லை;ஊரே வறட்சியில் தத்தளிக்கும்போது
இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசங்கள் எதையும் விட்டுவைக்காமல் அங்கு நட்சத்திர விடுதிகள்
கட்டுகின்றனர்.ஆறுகள்,குளங்கள், அருவிகள்,மலைகள் என எந்த நீர்நிலையையும் விடுவதில்லை;எங்கேனும்
இயற்கை கொஞ்சம் மிச்சம் இருப்பதாகத் தெரிந்தால்,அந்தப் பிரதேசத்தைக் கைப்பற்றிவிடுகின்றனர்.பிறகு, கழிவுகளை
ஆற்றில் கொட்டி,ஊரெல்லாம் ப்ளாஸ்டிக்கை வீசி,வாகனங்களால் சூழலை மாசுபடுத்தி,அதை ஒரு
சாக்கடையாக மாற்றிவிட்டு,வேறு இடம் தேடி கிளம்பிவிடுகின்றனர்.
இப்படி நட்சத்திரவிடுதிகளில்,தீம் பார்க்குகளில்,நீச்சல் குளங்களில்,கோல்ஃப்
மைதானங்களில்,கிரிக்கெட்மைதானங் களில் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை இரக்கம் இல்லாமல்
வீணடிக்கும் இவர்கள்,கடைசியில் தண்ணீர் பஞ்சம் முற்றியவுடன் ‘மக்கள் தண்ணீரை சிக்கனமாக
பயன்படுத்த வேண்டும்’ என்று கூசாமல் அறிவுரை சொல்கின்றனர்.உண்மையில் இந்த அறிவுரையை
ஆளும் வர்க்கம் தன்னை நோக்கியே சொல்லிக் கொள்ள வேண்டும்.ஏனெனில்,ஏழைகள் ஒருபோதும் தண்ணீரை
வீணடிப்பதில்லை.தண்ணீர் எடுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கிறது என்பது அவர்களுக்குத்
தெரியும்.இடுப்பில் குழந்தையை வைத்துக்கொண்டு அடிகுழாயில் தண்ணீர் அடிக்கும் பெண்ணிடம்
சென்று,தண்ணீர் சிக்கனம் பற்றி பேசிப்பாருங்கள். . . பதில்,வார்த்தைகளில் வராது.
நன்றி: ஜீனியர் விகடன்,பக்கங்கள்31,32,33,வெளி யீடு 10.7.13
No comments:
Post a Comment