வணங்குவோர்க்கு வாழ்வு தரும்
வாழ்த்துவோர்க்கு வசதி தரும்
போற்றுவோர்க்கு புகழ் தரும்
தூற்றுவோர்க்கும் இன்பம் தரும்
நினைத்தாலே நிம்மதி தரும்
நீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே!
பக்தர் பரவசமுற பலன் தரும்
பைரவர் திருவடியே கதி
சஷ்டியின் சிறப்பில் சண்டபைரவர்
திருஷ்டியால் காக்கும் காலபைரவர்
அகிலம் போற்றும் அஷ்ட பைரவர்
அன்பால் காக்கும் ஆனந்த பைரவர்
சொர்ணம் தருவார் சொர்ண பைரவர்
சுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்
சங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்
சகலமும் தருவார் சர்வதேவ பைரவர்
வருக வருக வடுகபைரவா வருக
வளம்தர வருக வஜ்ரபைரவா வருக
வருக வருக உக்கிரபைரவா வருக
உவகைதர வருக உலகபைரவா வருக
பைரவி போற்றும் பைரவா வருக
ஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக
ஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக
ஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக
காலத்தின் நாயகா கால பைரவா வருக
கலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக
நலம் தரும் நரசிங்க பைரவா வருக
நாளும்காக்கும் நாக பைரவா வருக
கோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக
ஞாலம் போற்றும் ஞானபைரவா வருக
தாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக
மோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக
அவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக
குவலயம் காக்கும் குரோதன பைரவா வருக
உலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக
திருவருள் புரியும் திகம்பர பைரவா வருக
சண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக
ருசியான உணவுதரும் ருருபைரவா
வருக
சந்தோஷம் தரும் சம்கார பைரவா
வருக
பித்தம் போக்கும் பீஷணபைரவா வருக
வருகவருக வரமருளும் வரதபைரவா வருக
தருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக
பருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக
பெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக
நடனம் புரியும் நர்த்தன பைரவா வருக
சதிராடும் சர்ப்ப பைரவா வருக
ஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக
பாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக
சுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்
முப்புரமெரி செய் முக்கண்ணும்
முகவழகு கூட்டும் நாசியும்
சீற்றம் காட்டும் சிங்க பல்லும்
இடது செவியில் பொன்னாபரணமும்
இன்பமூட்டும் இள நகையும்
அழகிய தோளும் அற்புத அழகும்
மார்பில் பஞ்சவடி தரும் எழிலும்
எழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்
இளமை காட்டும் வாலிபமும்
மணி ஓசை தரும் கிண்கிணியும்
கையிலே கபாலமும் சூலமும்
தோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்
ஏற்றம் தரும் தோற்றமாய்
பத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்
பரவசம் தர வருகவே வருகவே
மெய் உணவு கேட்ட மெய்யடியாரே
உய்ய வழிகாட்டும் உத்தமரே
பொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே
சேய் மகிழ விரைந்து வருவீரே
ஆணவ பிரமன் ஆர்ப்பரிக்க
அன்னை பார்வதி மனம் நொந்திடவே
ஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி
அச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்
தலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்
தாயுமானவன் சிரித்தபடி ஏற்றான்
கையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே
பூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே
கற்றவர் போற்றும் காசியாம்
பாவம் போக்கும் பத்ரிநாத்தாம்
எங்கும் திரிந்தான் பரமன்
காசியிலே கபாலம் கையை விட்டுபோனதே
மூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே
ஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே
பொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்
கிள்ளியெடுத்திட்டான் அத்தலைதனை
வீடு தேடியொரு வேளையிலே
பிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே
ஐந்தில் ஒருதலையே தூற்றியதாம்
தூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே
எத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்
அகங்காரம் கொண்டோர் ஆணவமுள்ளோர்
அழிந்திடத் தான் வேண்டுமென்றே
பிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே
பத்ரிநாத்திலே பிரம்மகபாலம் தெறித்துவிழுந்ததாம்
காசியிலே கபாலம் கையைவிட்டகன்றதாம்
கண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்
மலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்
எல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்
முனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்
அன்னமளப்பவனுக்கே அன்னமிட்டாள் அன்னபூரணி
ஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே
இரத்தபிட்சை பெற்றிட வைகுண்டமேகினார்
இடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்
விஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்
கபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு
கண்ணான கணவன் மயங்கிவிழவே
கதறி அழுதிட்டாள் மகாலட்சுமி
கணவனுயிரை தருமாறு சாவித்திரியானாள்
மணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ
மாண்டவர் மீண்டால் மகிழ்வாரன்றோ
மாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்
பத்து அவதாரமெடுத்து பகைவரையழித்தே
இரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.
அந்தகாசுரனென்னும் புதல்வனும் அசுரனானான்
அகிலத்தையே ஆட்டி படைத்தான்
அன்னையுருவு கண்டு ஆசைப்பட்டான்
அவனை அழித்து அல்லல் அகற்றினார்
மணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்
இனியொரு விதி செய்தே மக்களை காக்க
கனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே
மதிகெட்டவர்களை அழித்திட்டார்.
முண்டகன் என்றொரு கொடியவன்
கண்டபடி தந்தான் துன்பங்களை
அண்டம் நடுங்க ஆட்டிப்படைத்தான்
பிண்டமாய் வீழ்த்தினார் பைரவரே
எண்ணங்களிலே மாற்றம் தரும்
இதயத்திலே எழுச்சி தரும்
அடியவருக்கு அருள்புரியும்
பைரவ புராணத்தை பாடிடுவோம்
காலத்தின் நாயகன் கால பைரவனென்றே
ஜோதிடமும் ஆன்மீகமும் கூறிடுமே
விதியும் அவனே வெற்றியும் அவனே
வேதமும் அவனே வேதநாயகனும் அவனே
அட்டவீரட்ட தலங்கள் அற்புதத்தலங்கள்
ஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்
அம்பலவாணன் பைரவரூபமான இடங்கள்
அகிலத்தோரை காத்திட தலங்கள்
தெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்
ஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்
எத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்
அத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே
எங்கும் பைரவர் எதிலும் பைரவர்
என்றோதி மகிழும் நெஞ்சோர் வாழ்க
ஐந்து தலையரசே ஆகாசபைரவரே
அல்லல் நீங்கிட வருவீரே
தலைதனை தராபாலன பைரவர் காக்க
கேசந்தனை கேசர பைரவர் காக்க
நெற்றிதனை நிர்பய பைரவர் காக்க
கண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க
செவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க
நாசிதனை நர்த்தன பைரவர் காக்க
வாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க
நாக்கினை நானாரூப பைரவர் காக்க
கழுத்தினை கராள பைரவர் காக்க
தோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க
கைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க
மார்பினை மந்திரநாயக பைரவர் காக்க
விலாவினை விருபாச பைரவர் காக்க
வயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க
இடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க
மறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க
தொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க
முழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க
பாதமிரண்டும் பரம பைரவர் காக்க
விரல்களைத்தும் விஜய பைரவர் காக்க
இன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி
சங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி
சீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி
உயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி
உன்மத்தம் போக்குவாய் போற்றி
குருட்டை நீக்குவாய் போற்றி
கர்ப்பதோஷம் போக்குவாய் போற்றி
உஷ்ணரோகம் போக்குவாய் போற்றி
ஒவ்வாமை அகற்றுவாய் போற்றி
இளைப்பு நோய் நீக்குவாய் போற்றி
சளித்தொல்லை போக்குவாய் போற்றி
சருமத்தொல்லை நீக்குவாய் போற்றி
விஷபயம் போக்குவாய் போற்றி
பொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி
விலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி
பகைமையை அழிப்பாய் போற்றி
உடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி
அன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி
தந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி
முன்னோர்க்கும் நலம்தருவாய் போற்றி
நல்லதொரு துணைதருவாய் போற்றி
துணையின் துன்பம் களைவாய் போற்றி
சந்தானபாக்கியம் தருவாய் போற்றி
புத்திரதோஷம் போக்குவாய் போற்றி
கடன் தொல்லை நீக்குவாய் போற்றி
களிப்புடன் வாழ்விப்பாய் போற்றி
என்றும் புகழ் தருவாய் போற்றி
ஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி
பொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி
பில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி
கெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி
பேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி
சேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக
பாசமிகு பைரவமூர்த்தியே வருக
காலனைவிரட்டும் கால பைரவா வருக
ஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக
கயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக
பாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக
சுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக
சந்ததிதரும் சந்தான பைரவா வருக
ஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக
சிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக
வெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக
நிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக
சுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக
தடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக
விசாலமனம் தரும் விசாலாக்ஷ பைரவா வருக
ஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக
குறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக
கல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக
மேன்மை தரும் மேகநாத பைரவா வருக
சோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக
கற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக
அவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக
சங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக
பூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக
தண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக
காதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக
லாபம் தரும் லோகபால பைரவா வருக
பூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக
ஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக
கண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக
அந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக
தட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக
வித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக
அதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக
பிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக
குலம் காக்கும் குல பைரவா வருக
சர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக
ஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக
சிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக
சீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக
கர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக
குற்றம் களையும் குலபால பைரவா வருக
சடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக
கோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக
புத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக
லட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக
நிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக
சிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக
கஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக
பிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக
மண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக
விருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக
சலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக
கத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக
பட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக
எதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக
சோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக
பீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக
பூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக
ரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக
பசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக
வினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக
நிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக
சக்திக்கும் பாதியுடல் தந்த
சச்சிதானந்த பைரவா வருக
அட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக
பைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக
பண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக
ராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக
முந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக
பார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்
பக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்
சண்முகசுந்தரம் பாடிய கவசம்
நவபைரவர் அருளும் நற்கவசம்
பைரவ சஷ்டி கவசம் இதனை
செப்பிடுவோர் ஜெகமாள்வர்
ஓதுவோர் ஓங்குபுகழ் பெறுவர்
கூறுவோர் கூற்றனை வெல்வர்
வாசிப்போர் வாழ்வுதனை பெறுவர்
பாடுவோர் பார்போற்ற பவனி வருவர்
சொல்வோர் சொத்துக்களை பெறுவர்
கேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்
சரணம் சரணம் பைரவா சரணம்
சரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்
சரணம் சரணம் திருவடி சரணம்
இயற்றியவர்:பண்ணாரிதாசன் என்ற சோம.சண்முகசுந்தரம்,சேலம்
சிறப்பு...
ReplyDeleteபண்ணாரிதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...