Wednesday, March 28, 2012

கூழ் ஊற்றும் விழா


ஆடி மாதத்தில் மாரியம்மன் கோவில்களில் கூழ் சமைத்து ஊற்றும் விழா கொண்டாடுவதை காலம் காலமாக கண்டு வருகின்றோம். அதற்கு என்ன காரணம்? என்று கேட்டால் விதண்டாவாதம் பேசாதே என்று தான் பதில் தருவார்கள் பெரியோர்கள். இதைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள் என்பதை பார்போம்.

கூழ் சமைக்க அரிசி வேண்டும். அது எப்படி கிடைக்கின்றது என்றால் விளை நிலங்களில் கிடைக்கின்றது. நெல் காட்டு பயிர் அல்ல அதாவது தானே விளையும் பயிர் அல்ல. நன் செய்யாகிய -பன்படுத்தப்பட்ட - நிலத்தில் உழவு செய்து நீர் பாய்ச்சி விதை விட்டு வளர்த்து வரும் பயிரை விலங்கினங்கள் தீண்டாமலும், காட்டுப் பறவைகள் நெல்லைக்  கொண்டு செல்லாமலும்  காக்க வேண்டும். அதற்கு பிறகு தான் விளைச்சல் கிடைக்கும். நன்றாக விளைந்த பின் அறுவடை செய்து அதில் உள்ள பதர், கருக்காய்,  சாவட்டை அரிசி, தூசு முதலியவற்றை நாவிப் புடைத்து கிடைத்த நெல்லை களஞ்சியத்தில் சேர்ப்பார்கள். இவ்வாறு நாவிப் புடைத்து ( குத்திப் புடைத்து )சுத்தம் செய்த அரிசியே கூழ் சமைக்க உதவும்.
கூழ் - என்பது அன்னம் அரிசி நன்றாக  குழைந்து கனிவு பெற வேண்டும். அதை உண்பதற்கு பதம் பார்த்து வடிக்க வேண்டும். முறையாக பதம் பார்த்து வடித்த கூழை இலையில் பரிமாறி உண்ண வேண்டும். இதை தான் "ஆறில் பதம் பார்க்கலாம்" என்பர். இதை விடுத்து அவசரப்பட்டு( பதம் பார்க்காமல்)வடித்தால் உண்பவர் நாக்கை புண்படுத்தி விடும்.இதை கிராம மக்கள் "வெந்தது போதும் முந்தியில் போடு" என்பர். முந்தியில் போட்ட வேகாத சோறு தண்ணீரை வெளிவிடும். அது காலில் பட்டு வேதனை தரும். இதை "வாய் கொழுப்பு சேலையில் வடிந்தது சேலை கொழுப்பு சிந்தி வடிந்தது" என்பார்கள். பக்குவம் இல்லாமல் செய்கிற செயலை இவ்வாறு சொல்வார்கள். சரி இதற்கும்  திருவிழாவிற்கும் என்ன தொடர்பு என்பதை  பார்ப்போம்

நெல் ஆனது வளர்ப்பது. ஞானம் என்பது வளர்க வேண்டியது. நன்செய் நிலம் என்பது நமது உடல் ஆகும். அதில் செய்யும் உழவு என்பது நாடி சுத்தி. நீர் விடுதல் என்பது வாசி தாரணை(பயிற்சி). வித்து விடுதல் என்பது பிராணாயமம். நெல் வருதலே - சாதனை ,விளைவு - கூழ் சமைப்பது. பதர் என்பது உமி ஆகும். இந்த உமி தான் நெல் வருவதற்கு காரணம். இதில் உ என்பது 2 என்பதை குறிக்கும். மி என்பது மிகுந்தது என்பதாம்- அதாவது இருவினை - (நல்வினை தீவினை) இதுவே மனித பிறப்புக்கு காரணம்( நெல் விளைவு). சாவட்டை நெல் என்பது விளையாத நெல். ஆணவம், கன்மம், மாயை குறிக்கும் (புடைத்து எடுத்து விட வேண்டும்). பதர் என்பது நெல்மணி இல்லாத நெல், வார்த்தை, நடப்பு செயற்பாடு,மகிழ்ச்சி, மல நீக்கம் என்பனவாம். நல்ல குணம் இல்லாதவரை பதர் என்பர். கரும இந்திரியம் வழி உயிர் செல்வது. கருக்காய் என்பது(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்)  இது அன்னம் சமைக்க  உதவாது (புலன் வழி உயிர் போக கூடாது). தூசு என்பது - பாசம் - பற்று ஆகும்

குத்தி புடைத்தல் என்பது  - சிவயோக பயிற்சி. குத்தினால் தான் நெல்லில் உள்ள  உமி போகும். இதை தண்ணீர் விட்டு கழுவி விட வேண்டும் இல்லையென்றால் தொண்டையில் குத்தும். உலை வைப்பது  என்பது- மூலாதாரத்தில எரியும் நெருப்பு. 
கூழ் சமைத்தல் என்பது - கு + ஊழ்
கு- உயிர் - இன்மையை (நடப்பு) குறிக்கும்
ஊழ் - விதியை குறிக்கும்(கருவில் வருவது) (ஊழ் வினை உயிரை பற்றும்) அதாவது  விதியை மாற்றுதல்.

ஆறில் பதம் பார்ப்பது என்பது
 ஆறு என்பது - ஆறு ஆதாரம்
பதம்- என்பது முதிர்வு அடைவது

உயிரானது ஆறு ஆதாரம் கடந்து நன்றாக பக்குவம் ஏற்பட்டு உச்சியை அடைவது என்பதாம்.
வெந்தது போதும் முந்தியில் போடு என்பது ஞானம் பெறாமல் பிழைப்பிற்க்காக வாய் ஞானம் பேசி மக்களை ஏமாற்றுதல். அது அவர்களை (காலை) கால்மூச்சு துன்பம் செய்யும் என்பதை வாய் கொழுப்பு சேலையில் வடிந்தது. சேலை கொழுப்பு சிந்தி வடிந்தது என்று கூறுவது. இவ்வாறு கூழ் சமைக்கும் நிகழ்வை விழா வாக ஏற்படுத்தி  எல்லாரும் ஞானம் பெற வழி செய்தனர் பெரியோர்கள். இதனால் உழவு தொழில் தெய்வீகம் என்றனர். உழவுக்கு வந்தனை செய்வோம்

"பாண்டு முளைப்ப தரிசியே யானாலும்
விண்டுமி போனால் விளையாதே
"
                                                ஒளவை
அவித்த நெல் முளையாது.

சிவயோக சாதனத்தில் முதிர்ந்த உயிர் மீண்டும் பிறப்பது இல்லை. அதாவது பிறப்பு இறப்புஎன்னும் துன்பம் விலகி விடிகிறது.

"சுழன்று ஏர் பின்னது உலகம் ஆதலால்
சுழுன்றும் உழவே தலை"

                                                வள்ளுவர்.




"கழனிகள் திருத்தி வயல் நிலம் உழுது
கண்டோம் விளை நெல்  களிப்பாக செகம்
மருள் விலக தெய்வ நெறி
மாந்தர் நலம் வளர்க"


                                          நெருஞ்சில்  சித்தர்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers