Wednesday, March 28, 2012

புரியட்ட காயம்




வெங்காயம் ,பெருங்காயம் இவற்றை பற்றி நமக்கு  நன்றாக தெரியும்.
புதிதாக "புரியட்ட காயம்"  என்றால் என்ன என்று தோன்றுகிறதா ?
ஒளவையாரும் தனது "விநாயகர்  அகவல்" லில் இந்த வார்த்தையை எடுத்தாண்டு உள்ளார்கள்

"புரியட காயம் புலப்பட எனக்கு
தெரியெட்டு நிலையும் தெரிசனபடுத்தி"

                                                     என்கிறார்.

அப்படி என்றால் இந்த காயம் என்ற உடம்பில்  ஏதோ ஒன்று  புரியாமல் இருக்கின்றது அல்லவா!!
அண்டத்தில் உள்ள எல்லா சீவராசிகளையும் விட மனிதனுக்கு மட்டுமே இரண்டு உடம்புகள் உள்ளன. அவற்றை அறியும் ஆற்றல் அவனுக்கே உண்டு என்று பெரியோர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக எடுத்து கூறி வருகின்றனர். இரண்டு உடல் என்பது


1) தூல உடம்பு (பரு உடல்)
2) சூட்சும உடல் (உள் உடம்பு)

இந்த இரண்டாவது உடம்பை தான் புரியட்ட காயம் என்கிறார்கள். இந்த உடலானது மறைவாக இருந்து இந்த பரு உடலை நடத்தி வருகின்றது. இந்த உள் உடம்பானது எட்டு வகைப்படும்  அவையன
1) அறிவு ( அனைத்தையும் அறிவிப்பது)

 2) நினைப்பு ( ஒன்றை நிதானிப்பது)

3) மறப்பு ( அதை மறத்தல் )

4) கவனம் ( மீண்டும் அதை அவதானிப்பது)

5) மனம் ( எண்ணங்களின்  தொகுப்பு )

6) ஆசை ( ஒன்றை செய்ய முயற்சித்தல் )

7) செயல் ( ஒரு செயல் /கருமம் )

8) விளைவு ( இன்பம் /துன்பம்  நுகர்வு )

இவை எட்டு சேர்ந்ததே புரியட்ட காயம்

       புரி - முடிச்சு
      அட்டம் - எட்டு
       காயம் - உடம்பு

 இவை அனைத்தும் முடிச்சு  போன்று பரு உடலில் ஓர் இடத்தில் கட்டப்பற்று இருக்கின்றது 
இதை பெரியோர்கள் (சித்தர்கள்) எட்டு ,அ,அகரம்,பேசா எழுத்து , அசபை, எண்குணம்   என்றெல்லாம்  கூறியுள்ளார்கள். இவற்றை முதிர்ந்த  சற்குரு நாதர் மூலம் கண்டு அறிந்து கொள்ள வேண்டும்

"புறப்பட்டு புக்கு  திரிகின்ற    வாயுவை 
நெறிபட உள்ளே நிர்மல        மாக்கில் 
உறுப்பு சிவக்கும் உரோமம்   கருக்கும்
புறப்பட்டு போகான் புரிசடை யோனே" 

                                               திருமூலர்

இந்த புரியட்ட காயத்தை சற்குரு நாதர் மூலம் தெரிந்து கொள்ளுதலே "தீட்சை  " எனப்படுகிறது. இதை சித்தர்கள்  மாற்றி பிறத்தல் என்கிறார்கள் . இதையே இயேசு நாதரும் " நீ இன்னொரு பிறப்பு பிறக்காவிட்டால் பரலோக ராச்சியத்தில் நுழைய முடியாது" என்கிறார் 


அழுகண்ணி சித்தரும்

"ஊத்தை  சடலமடி உப்பிருந்த பாண்டமடி 
மாற்றி பிறக்க மருந்தெனக்கு  கிட்டுதில்லை 
மாற்றி பிறக்க மருந்தெனக்கு கிட்டுமென்றால்
ஊத்தை சடலம் விட்டு உன் பாதம் சேரேனோ "

                                                             என்கிறார்

சித்தர்கள்  வழி நின்று "ஊத்தை"  என்ற மலமறுத்து வாழ்வோம்.

No comments:

Post a Comment

Total Pageviews

Followers