Wednesday, March 28, 2012

சைவ நெறிதற்காலத்தில் சைவமா? என்று கேட்டால் அதற்கு பதில் உணவைப் பற்றி கூறுகிறார்கள். வழக்கமாக மாமிசம் உண்பவரை அசைவம் என்றும், காய்கறி, கனிகளை உண்பதை சைவம் என்று கூறுகின்றனர்.மெய்ஞானத்தில் அதன் பொருள் வேறாகும். மனித உடலில் வலது பாகத்தில் உள்ள மனோன்மணியில் எட்டு குணங்களுடன் சதாசிவம் ஆடிக் கொண்டிருப்பதால் அதற்கு அசைவம் என்று பெயர். இடதுபக்கம் உள்ள ஞானமணியில் அசைவில்லாமல் ஏழு அணுவாக உள்ள சக்தி இருப்பதால்  அதற்கு சைவம் என்று பெயர். மனித குலம் உய்ய வந்த மதங்களில் முதலில் தோன்றியதே சைவமாகும்.

சீவன் ( பசு) சிவத்துடன்(பதி) கலத்தலே சைவம் எனப்படும். இதை திருமூலர் சைவம், சிவனுடன் சம்பந்தம் ஆவது என்கிறார். இன்று கற்பனையில் உருவாக்கி வைத்துள்ள காளை மாட்டின் மீது வரும் மனித உருவமன்று சிவம். சிவநிலை (அ) சைவநிலை என்பது அசைவிலாத பெருவெளி நிலை ஆகும். உடம்பினுள்ளே அசைவில்லாமல்
இருக்கும் பெருநிலையில் அடக்கமாக இருத்தலே சைவமாகும். இதை வள்ளுவர் அடக்கம் அமரருள் உய்க்கும் என்கின்றார். இருதயத்தில் உள்ள பெருவெளி சற்று அசையும் என்றால் அசைவம் ஆகிறது. ஓராயிரம் எண்ணங்களை அசைபோட்டு கொண்டுள்ள அனைவரும் அசைவர்களே. எண்ணங்களற்றவறாய், அறிவாய், மூச்சோடாமல் சும்மா இருப்பவரே மெய்யான சைவர் ஆவார்கள். அசைவர்களை சைவர்களாக மாற்றுவதே சைவ நெறியாகும். சைவத்தின் அடையாளங்களாவன திருநீறு பூசுவது, உருத்திராக்கம் அணிவது, ஐந்தெழுத்தை ஓதுவது, புலால் உண்ணாதிருத்தல் ஆகியன நெறிகள் சைவம் எனக் கருதப்படுகிறது. இவற்றின் உண்மையை அறியாமல் சாம்பலை பூசுவதும், கொட்டைகளை அணிவதும்,  "நமசிவாய" என்று கூறுவதும் பொய்யாய்  சடங்காய் செய்கின்றனர். விபூதி என்பது வெற்றி கொள்ளும் தீ ஆகும் ( குரு பிரான் சொன்ன திருவாக்கு) இதை பூசிக்கொள்ள வேண்டும். இதை திருமூலர் "கங்காலன் பூசுங் கவசத் திருநீறு" என்கின்றார். உருத்திராட்சம், உருத்திரன்(எமன்) அட்சம்(ஒளி) எமன் அஞ்சும் மணியே உருத்திராட்சம் மணி ஆகும். குரு பிரான் உணர்த்திய நெருப்பு பொருளே உருத்திராட்ச மணி ஆகும். இதை அணிந்து கொள்ள வேண்டும். பஞ்சாட்சரம் என்பது எழுத்தன்று, ஒலியன்று, சொல்லன்று அது மெளன மொழியாகும். இருதய கமலத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உண்மையான சீவன் ஆகும். செபிக்கும் மொழியல்ல.இதை "உற்று உற்று பார்க்க ஒளிவிடும் மந்திரம்" என்பார் திருமூலர். புலால் மணம் வீசும் தன் தேகத்தின் மீதும் , பிற உயிர் தேகத்தின் மீதும், பெண் தேகத்தின் மீதும் பற்று வைக்காதவரே ஞானி எனப்படுவார்கள். இதுவே புலால் மறுத்தல்  எனப்படும்

"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் "

                                     என்கிறார் வள்ளுவர்.

சைவத்தின் குறிக்கோளாவது வீடுபேறு அடைதலாகும்.அதற்கு சரியை, கிரியை, ஓகம், ஞானம் என்னும் நான்கு படி நிலைகள் உள்ளன. இன்நான்கிற்கும் குருவே துணையும், வழி காட்டியாகவும் இருக்க வேண்டும். சிவச்  செயலை பூரணமாக ஏற்றுக்கொள்ள பொருள் ,பதவி, வசதி, மதிப்பு  இவற்றை தள்ள வேண்டும். பரம்பொருளை அறிந்து அறிய  குருபிரானின் வழிகாட்டல் அவசியம் வேண்டும். இதுவே தெய்வீகம் எனப்படும். இதையல்லாது  ஆலய வழிபாடு, தீர்த்த யாத்திரை, விரதம், அனுட்டானம் இவை முழு மூட செயல்கள் ஆகும். பொய் சமய வழிபாட்டில்  வாழ்நாளை வீணாக்கி மரண கதியை அடையாமல் சைவநெறி நின்று மேன்மையடைய வேண்டும்.
"பேருற்ற உலகிலுறு சமயமத நெறியெல்லாம்
பேய்பிடிப்  புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென வுணர்ந்திடா உயிர்கள் பல
பேதமுற் றங்கு மிங்கும்
பொருற் றிறந்து வீண் போயினர்"


என்று வள்ளல் பெருமானின் வாக்கை நினைவில் கொள்ள வேண்டும்

பணவெறி, மதிப்பு வெறி, காமவெறி, பதவி வெறி, மதவெறி, சாதிவெறி இவற்றில் வாழ்நாளை பறிகொடுக்காமல்  சைவநெறி நிற்போம்

"சீவன்  என்ன சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகி லார்
சீவனார் சிவனாரை அறிந்த பின்
சீவனார் சிவனாகி யிருப் பரே"

  
                                       திருமந்திரம்

"சிவாயநம என்று  சிந்தித்து இருப்போர்க்கு
அபாயம் ஒரு நாளும் இல்லையே"
 
                                              ஒளவை

2 comments:

  1. Hello Lakshmi ur article is superb. may i know how u got this knowledge!

    ReplyDelete
  2. Hello Lakshmi ur article is superb. may i know how u got this knowledge!

    ReplyDelete